PRESS RELEASE[20.07.2011]:: சமச்சீர் கல்வி: செயலலிதா முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் - பெ.மணியரசன் அறிக்கை!
Wednesday, 20 July 2011
சமச்சீர்க் கல்வி :
செயலலிதாவின் மோசடி முயற்சிகளை அம்பலப்படுத்திவிட்டது உயர்நீதிமன்றம்
முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்
சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய பொது பாடத்திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18.7.2011 அன்று அளித்தத் தீர்ப்பு தமிழக முதலமைச்சர் செயலலிதாவின் சமச்சீர்க் கல்விக்கு எதிரான தீய நோக்கத்தையும் சட்டத்துக்குப் புறம்பான, மலிவான தந்திரங்களையும் அம்பலப்படுத்தி விட்டது.
வல்லுநர் குழு ஒரு மனதாக பரிந்துரை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்த அறிக்கை போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை சான்றுகளுடன் தோல் உரித்துக் காட்டிவிட்டது உயர் நீதிமன்றம். தமிழகக் கல்வித்துறை செயலாளர் சபீதா முதல்வரின் விருப்பத்திற்கேற்ப வல்லுநர் குழு அறிக்கையை தயாரித்திருக்கிறார். அதில் வல்லுநர்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு எம்.ஒய் இக்பால், நீதிபதி திரு டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் வல்லுநர் குழு உறுப்பினர்களின் தனித்தனியே தெரிவித்தக் கருத்துகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் கூறினர். அவ்வாறு பெறப்பட்ட கருத்துகளில் ஒரு பெண் உறுப்பினர் சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும் தேவையானது என்றும் கருத்துக் கூறியுள்ளார் என்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்துடன் வல்லுநர் குழு உறுப்பினர்களில் இருவருக்கிடையே மின்னஞ்சலில் நடந்த கருத்து பறிமாற்றத்தில் குறிப்பாக சமூகஅறிவியல் பாடம் பற்றி பின் வருமாறு கூறியுள்ளனர். '' சமச்சீர்க் கல்வி பாடங்களில் குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடங்கள் ஏறக்குறைய இல்லை. மாணவர்களின் மனதில் இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் அரசியலை விதைப்பது கடினம். இந்தப் பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நிரூபிப்பதும் மிகக் கடினம்.'' என்று கூறியுள்ளனர். இதையும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமச்சீர்ப் பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வல்லுநர் குழு ஒருமித்து கருத்துரைத்தாக ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதில் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இக்குற்றம் முதலமைச்சர் செயலலிதாவையும் கல்வித்துறை செயலாளர் சபீதாவையும் சேர்ந்ததாகும். இது ஒரு மோசடி செயலாகும். பதவியேற்கும் போது, விருப்பு வெறுப்பின்றி, பக்கச் சார்பின்றி சட்டப்படி தமது அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று செயலலிதா எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு நேர்
எதிரான செயலாகும். அவர் முதலமைச்சராகத் தொடர்வதற்கான தகுதியை இழந்துவிட்டார். கல்விதுறை செயலாளர் சபீதாவையை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
2004 ஆம் ஆண்டு தயாரிக்கபட்ட பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அந்த வல்லுநர் குழு எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. அப்படியிருக்க 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ள சமச்சீர்ப் பாடப் புத்தகங்களை புறக்கணித்துவிட்டு 2004 ஆம் ஆண்டு திட்டப்படி புதிய பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்குவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவது தவறான முயற்சி என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
'தன்னால் நேரடியாக சாதிக்க முடியாத செய்தியை சட்டத் திருத்தம் கொண்டு வந்து மறைமுகமாக சாதிக்க தமிழக அரசு முயன்றுள்ளது. ஒரு சட்டத்தில் கொண்டு வரும் திருத்தம், அந்த மூலச்சட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகக் கருதப்படும். இந்தச் சிக்கலில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி செயல் படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச்செல்வது உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள ஆணையை மீறும் செயலாகும். அதுமட்டுமல்ல இந்த செயல்பாடு , சமச்சீர்க் கல்விக்கான மூலச்சட்டத்தையே நீக்குவதற்கு சமமாகும்'', என்று நீதிபதிகள் தீர்ப்புரையில் கூறியுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மேற்படி கருத்துகள் முதல்வர் செயலலிதாவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியுள்ளன. சமூக சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானவர் செயலலிதா என்பது ஊரறிந்த உண்மை. இப்பொழுது சமச்சீர்க் கல்வியை நீக்குவதற்கு இவ்வளவு அப்பட்டமாக சூழ்ச்சிகள் செய்ததும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததும் அவருடைய சமூக நீதிக்கு எதிரான மன நிலைக்கு அப்பால், மெட்ரிக்குலேசன் பள்ளி முதலாளிகளுக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
தமது நிலைபாட்டை நீதிமன்றத்தில் நிலை நிறுத்த நேர்மையான வழிமுறைகளைக் கையாளாமல், சூதாக சூழ்ச்சித்திட்டங்களில் இறங்கிய செயலலிதா முதல்வர் பதவிக்கே தகுதியற்றவர். உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளபடி ஒரு கோடியே முப்பதாயிரம் மாணவர்களின் படிப்போடு விளையாடிக் கொண்டிருக்கும் செயலலிதாவின் முரட்டுத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் சக்தி எழுந்து போராடுவதுதான் சரியான தீர்வாக அமையும்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சென்னை
நாள்: 20.7.2011
0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home